புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 01) By Vijay Armstrong

Comments · 3696 Views

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 01) By Vijay Armstrong Cinematographer Tamil Film industry

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 01)

 
 
 
 
 
 
 
 
 
மனித வரலாற்றில், தொடர்ச்சியாகக் காணக்கிடைக்கும் ஒரு செயல், பதிந்து வைத்தல். மனிதன் தான் கண்டவற்றை, கடந்து வந்தவற்றை, உணர்ந்தவற்றை ஏதோ ஒரு ஊடகத்தைப் பயன்படுத்தி பதிந்து வைத்திருக்கிறான் காலம் தோறும். ஆரம்பம் முதலே, குகை ஓவியமாக, சிற்பமாக, பாடலாக தன் வாழ்வை பதிந்து வைக்கும் பழக்கம் மனிதனுக்கு இருந்து வந்திருக்கிறது. தன் வாழ்வில், தான் கடக்கும் சிறந்த கணங்களை, அனுபவத்தை, உணர்வைப் பதிந்து வைத்து, ரசிக்கும் பழக்கம் மனிதனுக்கு எப்படி உண்டாகிருக்கும் என்று யோசித்தோமானால்..
 
மனிதனுக்கு எல்லாமே கடந்த காலம்தான். கடந்துபோன காலங்களை அவனால் கைவிடவே முடிவதில்லை. வாழ்க்கை என்பது நிகழ்காலத்தின் அடிப்படையில் நிகழ்வது. இந்த கணம் மட்டுமே அதற்கு சாத்தியம். கடந்த கணங்களைப்பற்றி அது கவலை கொள்வதேயில்லை. முந்தைய கணத்தின் ஆதிக்கம் அல்லது விளைவு, நிகழ் கணத்தினை பாதிக்கும் என்றானாலும், அது இயற்கைக்குத்தான் பொருந்துகிறது. வாழ்விற்கல்ல. இயற்கை, அதன் முந்திய நிகழ்வின் அடிப்படையில் தன்னை தகவமைக்கிறது, வடிவமைக்கிறது. அது, தட்ப வெப்ப மாற்றமாகட்டும், மழையாகட்டும், சிறுதுளி பெருவெள்ளமாகுவதாகட்டும், மரம், கொடி, புல் வளர்வதாகட்டும், செடி பூப்பதாகட்டும், காய் கனிவதாகட்டும், வண்டுகள் தேன் சேகரிப்பதாகட்டும், புழு பட்டாம்பூச்சியாக உருமாறுவதாகட்டும், கருத்தரித்தலாகட்டும்.. எல்லாம், எல்லாம் முந்தைய நிகழ்வின் தொடர்ச்சிதான். இயற்கை அதை அனுமதிக்கிறது. முந்தைய நிகழ்வின் தொடர்ச்சியாக நிகழ்காலம் இருப்பதை. 
 
மனிதனும் அப்படியே இயங்க விரும்புகிறான். முந்திய கணத்தின் தாக்கம் அவனுக்கு இருந்துக்கொண்டே இருக்கிறது. கடந்த காலத்தின் அனுபவத்தை அவனால் கைவிட முடிவதில்லை. அது கொடுத்த சுகம், உணர்வு, சோகம், பாடம், அறிவு என்று ஏதோ ஒன்று நிகழ்காலத்தை கடக்க அவனுக்கு அவசியமாக இருக்கிறது. காலம் காலமாக மனிதன் அப்படித்தான் வாழ்ந்து வந்திருக்கிறான். கடந்த காலத்தின் மிச்சம் அல்லது தொடர்ச்சி எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது அவனிடம். 
 
பொதுவாக நாம் அனுபவங்களை இரண்டு விதமாக சேகரிக்கிறோம். ஒன்று தகவல்களாக மற்றொன்று உணர்வாக. தகவல்களை சேகரித்து, அதற்கு அறிவு என்று பெயரிட்டு பாதுகாப்பதை மூளை என்னும் உறுப்பு எடுத்துக்கொள்கிறது. உணர்வுகளைச் சேகரித்து அதையே தன் அடையாளமாக நிலை நிறுத்திக்கொள்கிறது உருவமற்ற அரூப மனம். அறிவுக்கு, தகவல்கள் வேண்டும். தகவல்களின் தொகுப்பே அதன் வளர்ச்சியைக் குறிக்கிறது. மனதிற்கு நினைவுகள் வேண்டும். அதுவே அதனை சாஸ்வதமாக்குகிறது. 
 
எது எப்படியோ.. இன்றும் அத்தகைய பழக்கம் நம்மிடையே இருப்பதை நாம் மறுப்பதிற்கில்லை. அதன் நவீன வடிவங்களில் ஒன்று.. புகைப்படங்கள் எடுத்தல். ஆமாம், இன்று நாம் எடுத்து தள்ளும் புகைப்படங்களுக்கு பின் இருக்கும் உந்து சக்தி நம் முன்னோர்களிலிருந்து வந்தது. ஆதி காலத்து பழக்கம் அது என்றும், மனித மனதின் இருப்புக்கு அவசியாமானது அது என்றும் புரிந்துக்கொண்டால், ‘செல்ஃபியாக’ எடுத்து தள்ளும் இன்றைய தலைமுறையைக் குறை சொல்லமாட்டோம் அல்லவா(?!).
 
சரி, விஷயத்திற்கு வருவோம்.. இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக வீணடிக்கப்படும் சக்தி அல்லது செயல் எது என்று எடுத்துக்கொண்டால், அது புகைப்படங்களாகத்தான் இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், எல்லோர் கையிலும் கேமரா இருக்கிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்ஃபோன் வடிவில் அது உங்கள் பாக்கெட்டில் இருக்கிறது. அப்புறம் என்ன? படங்களை எடுத்து தள்ள வேண்டியதுதானே..!? 
 
ஆயினும், புகைப்படம் என்னும் கலைக்கு ஒரு வரலாறு இருக்கிறது. நீண்ட நெடிய வளர்ச்சிப் பாதை ஒன்று இருக்கிறது. காலகட்டங்கள் பலவற்றை கடந்து வந்திருக்கிறது அது. தன் வழி எங்கும் பல நிகழ்வுகளை அது பதிவு செய்து வந்திருக்கிறது. மனித மனங்களிலிருந்து என்றென்று அகல முடியாத, அகற்ற முடியாத பல காட்சிகளையும், வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற நிகழ்ச்சிகள், மாமனிதர்கள் என்று எண்ணிலடங்கா பதிவுகள் அதன் வரலாற்றுச்சுவட்டில் உண்டு. மேலும் அக்கலை தன் போக்கில் வளர்ச்சியும் அடைந்து வந்திருக்கிறது. ‘கேமரா அப்ஸ்குரா’ (camera obscura )-இல் துவங்கிய அதன் பயணம் இன்று ‘மெகா ஃபிக்சல்’ (megapixel) எண்ணிக்கையில் வந்து நிற்கிறது. 
 
1830-இல் கண்டுபிடிக்கப்பட்ட கலை இது. இன்று, அதன் கருவிகள் மட்டுமே பல பில்லியன் டாலர் வருவாயைத் தரக்கூடிய பெருந்தொழிலாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்குக் காரணமாக இருந்த ஆதிகாலத்து கருவியான ‘கேமரா அப்ஸ்குரா’ (Camera Obscura) 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆயினும் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரேபிய ஆய்வாளர் ‘ஹாசன் இபின் ஹாசன்’ (Hassan ibn Hassan) அவர்கள், தன் குறிப்பொன்றில் இன்றைய அனலாக் கேமரா (analogue photography) செயல்படும் தொழில்நுட்பத்தை ஒத்த ஒரு நுட்பத்தைப்பற்றி விவரித்திருக்கிறார். 
 
 
 
கேமரா அப்ஸ்குரா என்பது, அடிப்படையில் ஒரு கருப்புப் பெட்டி, அதில் ஒரு பக்கம் துளையொன்று இடப்பட்டிருக்கும். அதன் வழி ஊடுருவி வரும் ஒளியானது, பெட்டியின் அடுத்த பக்கத்தில் பிம்பத்தை உருவாக்கும். இந்த அடிப்படைத் தொழில்நுட்பம் இன்றைய கேமராக்களுக்கும் பொருந்தும். துளைக்கு பதில் லென்ஸ் வைத்திருக்கிறோம். லென்ஸின் வழி ஊடுருவி வந்த ஒளியை பதிவு செய்ய, முன்பெல்லாம் படச்சுருள், இப்போது சென்சார் அவ்வளவுதான். அடிப்படை என்னவோ அதேதான். 
 
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘ஜியோவானி’ (Giovanni Battista della Portacentury) என்னும் அறிஞர், கேமரா அப்ஸ்குராவைப் பயன்படுத்தி, எப்படி ஓவியம் வரைவதை இலகுவாக்கலாம் என்று எழுதினார்.   
 
 
வெளியே நிற்கும் நபரை, ஒரு துளையின் மூலம் பிரதிபலித்து, அதை ஓவியம் வரையும் கேன்வாஸ் மீது விழச்செய்து படம் வரைய உதவுவது. இது ஓவியம் வரைவதை இலகுவாக்கியது. இங்கே, கேமரா அப்ஸ்குரா ஒரு அறையைப்போன்று பெரியது. ஆனால், இதை யாரும் அங்கீகரிக்கவில்லை. ஜியோவானி மந்திரவித்தைகள் செய்வதாக குற்றம் சாட்டி, தண்டித்தார்கள். மறுமலர்ச்சி (Renaissance) காலகட்டத்தில் பல ஓவியர்கள் இந்த நுட்பத்தை பயன்படுத்தினார்கள், என்றாலும் யாரும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை. தாங்களும் குற்றம் சாட்டப்படுவோம் என்பது ஒருபுறமெனில், இது ஒரு ஏமாற்று வேலை என்று பலரும் நம்பியதும் ஒரு காரணம்.
 
ஆரம்பத்தில் புகைப்படத்துறையை ஒரு கலையாக யாரும் கருதவில்லை. சொல்லப்போனால், அது நுண்கலைகளை அழிக்க வந்ததாக கருதினார்கள். புகழ்பெற்ற ஓவியர்களான ‘லியானர்டோ’ ‘ மைக்கேலேஞ்ஜலோ’ (Leonardo, Michelangelo) போன்றவர்கள் புகைப்படக்கலையின் நுணுக்கத்தை தன் ஓவியங்களில் பயன்படுத்தினார்கள் என்று நம்பப்படுகிறது.
 
கேமரா அப்ஸ்குராவின் எளிய வடிவம் ‘Pinhole Camera’ என்றழைக்கப்பட்டது. ஒளிப்புகா கருப்பு பெட்டி, அதில் ஒரு பக்கம் துளை ஒன்றிருக்கும், மறுபக்கம் பிம்பத்தைப் பதிவு செய்யும் வேதிப்பொருட்கள் பூசப்பட்ட காகிதம் அல்லது தகடு இருக்கும். இதுவே கேமராவின் ஆரம்ப வடிவம். 

 
 
உலகின் முதல் புகைப்படம்:
 
இத்தனை ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு, இன்று நாம் பார்ப்பதற்குக் கிடைக்கும் உலகின் முதல் புகைபடம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது. ‘View from the Window at Le Gras’ என்ற பெயருடைய இப்படம் 1826 அல்லது 1827 ஆம் ஆண்டுவாக்கில் பிரஞ்சு கண்டுபிடிப்பாளர் ‘ஜோசப் நியெப்ஸ்’ (Joseph Niepce) அவர்களால் எடுக்கப்பட்டது. அவருடைய எஸ்டேட்டின் வெளிபுறப்பகுதியையும் கட்டிடத்தின் சுவரையும் சன்னல் வழியாக படம் பிடித்திருக்கிறார். 

 
 
அப்போதைய தொழில்நுட்பத்தில், இக்காட்சியைப் பதிவு செய்ய எட்டு மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது (பல நாட்கள் ஆகின என்று சொல்லும் ஒரு ஆய்வாளரும் உண்டு). ஒரு காட்சியின் ஒளியை ‘Camera Obscura’-வைப் பயன்படுத்தி ஒன்றுகுவிப்பது எப்படி என்று தெரிந்துவைத்திருந்த மனிதர்களுக்கு அதைப் பதிவுசெய்வது எப்படியென்று தெரியவில்லை. அங்கேதான் ஜோசப் நியெப்ஸ் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். "Bitumen of Judea" என்றழைக்கப்பட்ட, பெட்ரோலில் இருந்து எடுக்கப்பட்ட ஒருவகை தாரை ஒரு தகட்டில்(6.4 in × 8.0 in) பூசி, அதன் மீது கேமரா அப்ஸ்குராவைப் பயன்படுத்தி ஒளியை விழச்செய்தார். அத்தாரின் மீது ஒளி விழுந்த பகுதி கெட்டியாகியது. பிறகு வெள்ளை பெட்ரோலில் கழுவிப்பார்த்தபோது, மற்ற பகுதி கரைந்துப்போய், இத்தகைய காட்சி வடிவம் தங்கியிருந்தது. இந்த தகட்டை இன்றைய நெகட்டீவைப்போல (negative) பயன்படுத்தி, இதிலிருந்து மை பூசி பிரதி எடுத்திருக்கிறார்கள். அதற்கு  ‘Heliography’ என்ற தொழில்நுட்பம் பயன்பட்டிருக்கிறது. அதிக எடை கொண்ட தகடு மற்றும் எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாக இருந்ததுதான் இதிலிருந்து சிக்கல். 

 
 

(அந்த தகடு)
 
1839 இல் சர் ஜான் ஹெர்ச்செல் (Sir John Herschel) என்ற கண்டுபிடிப்பாளர் இத்தகட்டுக்குப் பதில் கண்ணாடியால் ஆன நெகட்டீவை கண்டுபிடித்தார். அதே ஆண்டு, கிரேக்க வார்த்தைகளான ‘Fos’ (ஒளி) மற்றும் ‘Grafo’ (வரைதல்) ஒன்றிணைத்து போட்டோகிராஃபி (Photography) என்ற பதத்தை உருவாக்கினார். ஒளியால் வரைதல்! ஒளியோவியம்! நல்லாயிருக்கில்ல..!
 
தொழில்நுட்பம் கொஞ்சம் வளர்ந்திருந்தபோதும், புகைப்படம் எடுத்தல் வளரவில்லை. அதற்கு பல  ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரும்பாலும் வசதி வாய்த்தவர்கள் தங்களை எடுத்துக்கொண்ட புகைப்படங்களாகத்தான்(Portraits) இருந்தது. பல கண்டுபிடிப்புகள், மேம்படுத்தல்களுக்குப் பிறகு, 1888-இல் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான கொடாக் (Eastman's Kodak) நிறுவனம் உதயமாயிற்று. அது அறிமுகப்படுத்திய ஒரு கேமராதான் இன்று நாம் எல்லோரும், கேமராவும் கையுமாக அலைவதற்குக் காரணமாக இருந்தது. 

தொடரும்...

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 02)
————————
 
பின் குறிப்பு: 
 
வரும் கட்டுரைகளில், கேமரா என்னும் கருவி வடிவமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக அதன் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்ததையும், புகைப்படம் என்னும் கலை அதன் எல்லைகளை விரித்துக்கொண்டு வந்ததையும் பற்றி விரிவாக பார்ப்போம். கூடவே அதன் வரலாற்றுச் சுவடையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
 
[அதற்கு முன்பாக உங்கள் வாழ்வில் மறக்க முடியா புகைப்படத்தை, அதன் காரணங்களோடு எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அது உங்கள் வாழ்வு சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வரலாற்று நிகழ்வாகவோ கூட இருக்கலாம்.]
 
imageworkshops.in@gmail.com
 
www.imageworkshops.in
www.vijayarmstrong.com
Comments