புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 02)

Comments · 3063 Views

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 02) By Vijay Armstrong Cinematographer Tamil Film industry

1888-இல் துவங்கப்பட்ட கொடாக் நிறுவனம், நூற்றாண்டு கடந்தும் பல புகைப்படக்காரர்களின் விருப்பத்திற்குரியதாக இருந்திருக்கிறது. சொல்லப்போனால் பல புகைப்படக்காரர்களை உருவாக்கியதே அதுதான் எனலாம். புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை நமக்கு ஏற்படுத்தியதே கொடாக் தான். அது கண்டுபிடித்த படச்சுருள் தான் புகைப்படம் பிடித்தலை உலகத்தாரிடையே பரப்பியது, அதிகரிக்கச்செய்தது.
 
முதல் படச்சுருள், முதல் கேமரா, முதல் டிஜிட்டல் கேமரா என அது கண்டுபிடித்த பல 'முதல்'கள் உலகெங்கும் பிரபலம். புகைப்படம் பிடித்தலை எல்லாருக்குமானதாக மாற்றிக் காட்டியது அதன் பெரும் சாதனை. 
 
1885-இல் 'roll of Eastman’s photo plates'-ஐ கண்டுபிடித்ததிலிருந்து பல நிலைகளை கடந்து 1889-இல் மக்கள் பயன்பாட்டிற்கான படச்சுருளை அந்நிறுவனம் தயாரிக்கத் துவங்கியது. அப்படச்சுருள் தான் திரைப்படம் என்னும் கலை உருவாக காரணமாக இருந்தது என்பதையும் இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
 
எடிசனின் (Thomas Edison) 'Kinetoscope' என்னும் கருவியும், கொடாக்கின் படச்சுருளும் சேர்ந்து திரைப்படம் என்னும் கலையை/துறையை உருவாக்கியது என்பது தனிக் கதை .

 
 
 
1900-இல் கொடாக் நிறுவனத்தின் முதல் கேமரா ‘Kodak Brownie’ அறிமுகப்படுத்தப்பட்டது. அட்டையால் (cardboard) ஆன ஒரு பெட்டி அது. அதில் ஒரு லென்சும், ஷட்டரும் இணைக்கப்பட்டிருந்தது. ‘நீங்கள் பொத்தானை அழுத்துங்கள், மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ (You press the button, we do the rest) என்ற விளம்பர வாசகத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இக்கேமராவில் 'paper film' படச்சுருள் இணைக்கப்பட்டிருந்தது. அதைப்பயன்படுத்தி நூறு புகைப்படங்களை எடுக்கலாம். புகைப்படம் எடுத்தவுடன் கேமராவையே கொடாக் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். 

 
 
 
அங்கே அவர்கள் கேமராவில் இருக்கும் படச்சுருளை எடுத்து டெவலப் செய்தும், மாற்றுப் படச்சுளை கேமராவில் இணைத்தும் கொடுப்பார்கள். இக்கேமராவே 'Amateur Photography'-இன் துவக்கமாக இருந்தது.
 
அங்கே துவங்கிய கொடாக்கின் வெற்றிப் பயணம், உலகின் மூலை முடுக்கு எல்லாம் போய்ச் சேர்ந்தது. உலகம் புகைப்படங்களை எடுத்துத் தள்ளியது. கொடாக் பெரும் பணம் பார்த்தது.
 
1935-இல் 'Kodachrome' என்னும் வண்ணப் படச்சுருளை கொடாக் நிறுவனம் கண்டுபிடித்து புழக்கத்திற்கு கொண்டுவந்தது. வண்ணமயமான உலகத்தை சிறைபிடிக்கும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டு உலகம் அதிசயத்தது. கொடாக் எல்லோருடைய இதயங்களிலும் இடம் பிடித்தது. இதுவும் பெரும் வெற்றியை அடையவே, அப்படச்சுருள் 8mm, 16mm, 35mm, 120, 116, 828 என எல்லா format-லும் அறிமுகப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து 74 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த 'கொடாக் குரோம்' படச்சுருள் 2009-இல் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. காரணம் என்ன என்பதை நாம் அறிவோம். ஆம், உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது.
 
சரி ஒரு புகைப்படக் கேமரா எப்படி வேலை செய்கிறது என்பதையும் புரிந்துக்கொள்ளுவோமா..!
 
ஒரு புகைப்படக் கேமரா, அடிப்படையாக மூன்று உறுப்புகளைக் (Element) கொண்டது. 
 
1. லென்ஸ் - Optical Element
2. படச்சுருள் - Chemical Element
3. கேமரா என்ற அமைப்பு(Camera Body) - Mechanical Element.   
 
இம்மூன்று உறுப்புகளை ஒருங்கிணைத்து தெளிவான பிம்பங்களைப் பதிவு செய்வதே ஒரு கேமராவிற்கு பின்னிருக்கும் தொழில்நுட்பமாகும். 

 
 
 
அடிப்படையில் கேமரா என்பது ஒளியை பதிவு செய்யும் ஒரு கருவி. ஒரு பொருள் அல்லது நபரின் மீது விழும் ஒளியானது பிரதிபலிப்பதனால் தான் நாம் அவற்றைப் பார்க்க முடிகிறது. அப்படி பிரதிபலித்து வரும் ஒளியை ஒருங்கிணைத்து தெளிவாக பதிவு செய்யவே லென்ஸ் பயன்படுகிறது. லென்ஸின் வழி ஊடுருவி வரும் ஒளியை படச்சுருள் (Film) எனப்படும் வேதிப்பொருட்கள் பூசப்பட்ட மெல்லிய பட்டை, தன் மீது விழும் ஒளியைப் பொறுத்து வேதிவினை புரிந்து ஒளியைப் பதிவு செய்கிறது. இப்படச்சுருள் மீது வேறு ஒளிகள் விழாவண்ணம் அது இருக்கும் அறை இருட்டாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. (ஆரம்பக்காலங்களில் இந்த படச்சுருளுக்கு பதிலாக வேதிப்பொருட்கள் பூசப்பட்ட தகடு அல்லது கண்ணாடியை பயன்படுத்தினார்கள்) லென்ஸின் வழி ஊடுருவி வரும் ஒளியானது படச்சுருளின் மீது விழும்போது மட்டும், விலகி வழி விட ஒரு தடுப்பு இருக்கிறது. இத்தடுப்புதான் ‘ஷட்டர்’ (Shutter) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஷட்டர் தடுப்பு எவ்வளவு நேரம் விலகி வழி விடவேண்டும் என்பதை நிர்ணயிக்கத் தேவையான அமைப்பும் கேமராவில் இருக்கிறது. அதே போல லென்ஸின் வழி எவ்வளவு ஒளி ஊடுருவி வரலாம் என்பதை நிர்ணயிக்கவும் ஒரு அமைப்பு உண்டு. இவ்வமைப்பு ‘அப்பார்ச்சர்’ (Aperture) என்று அழைக்கப்படுகிறது. 

 
 
நாம் படம் பிடிக்க விரும்பும் காட்சியை, நாம் பார்ப்பதற்கென்று ஒன்றும், பதிவு செய்வதற்கென்று ஒன்றும் என இரண்டு லென்ஸுகள் கொண்ட கேமராக்களை ஆரம்பக் காலங்களில் பயன்படுத்தினார்கள். இவற்றை ‘Twin-lens reflex Camera’ என்றார்கள். பிறகு, லென்ஸுக்கும் படச்சுருளுக்கும் இடையே ஒரு கண்ணாடியை சாய்வாக அமைத்து, லென்சில் இருந்து வரும் ஒளியை திசைதிருப்பி அதை ஒரு பட்டகம் (Roof Pentaprism) மூலம் நாம் பார்ப்பதற்கு வழிவகை செய்தார்கள். பிம்பத்தை பதிவு செய்ய ஷட்டரை திறக்கும்போது உள்ளே இருக்கும் கண்ணாடி மேல் நோக்கி நகர்ந்து ஒளியை படச்சுருளில் விழச்செய்யும். இப்படி ஒரு கண்ணாடி அமைத்து, ஒளியை பிரதிபலிக்க செய்வதனால் ஒரு லென்சே போதுமானதாக இருக்கிறது. ஆகையால் இவ்வகை கேமராவை ‘Single-lens reflex camera’ என்கிறார்கள். தற்போதைய டிஜிட்டல் கேமராவில் (Digital single-lens reflex camera) படச்சுருளுக்கு பதில் சென்சார்(Image Sensor) பிம்பத்தை பதிவுசெய்கிறது. அவ்வளவுதான்.
 
இது ஒரு எளிய தொழில்நுட்பம்தான். இதனை அடிப்படையாக கொண்டு எத்தனை வகையான கேமராக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, எத்தனை நிறுவனங்கள் இதில் பங்கு பெற்றிருக்கின்றன. எத்தனை உழைப்பும், சிந்தனையும் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிய வரும்போது நமக்கு கிடைக்கும் பிரமிப்பு இருக்கிறதே..! அடடா.. அதை சொல்லில் வடிக்க முடியாது. நேரில் கண்டு உணர வேண்டும். உங்களுக்கு அதில் ஆர்வமும், விருப்பம் இருக்கிறதா..!? இருக்கிறது எனில் நீங்கள் போக வேண்டிய இடம் ‘DR. ARUN’S PHOTOGRAPHY AND VINTAGE CAMERA MUSEUM’. சென்னை கோவலத்தில் தான் அவ்விடமிருக்கிறது. 
 
Dr.A.V.அருண் அடிப்படையில் பல் மருத்துவராக இருப்பினும், புகைப்படக்கலையின் மீதிருக்கும் தன் ஆர்வத்தினால், இந்த மியூசியத்தை அமைத்திருக்கிறார். ஆதிகாலத்து கேமராவிலிருந்து இன்றைய நவீன கேமரா வரை, காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கேமராவைப்பற்றியும், தகவல்கள் அதன் அருகிலேயே எழுதியும் வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால், ஒரு நாள் முழுவதையும் நீங்கள் அங்கே செலவிடலாம்.  புகைப்படமென்னும் இக்கலையின் உண்ணதத்தை, அதன் வரலாற்றுச் சுவடை, அது கடந்து வந்த பாதையை அங்கே நீங்கள் கண்டு களிக்கலாம். 
 
பாக்ஸ் கேமராக்கள், டிவைன் லென்ஸ் கேமராக்கள், போலராய்ட் கேமராக்கள், போர் காலத்தில் பயன்படுத்திய கேமராக்கள், 3D கேமராக்கள், உளவாளிகள் பயன்படுத்தி சிறிய வடிவ கேமராக்கள், விமானங்களில் பயன்படுத்திய கேமராக்கள், விடியோ கேமராக்கள், 8MM கேமராக்கள், ஆளுயர கேமராக்கள் என ஆதி முதல் அந்தம் வரை கேமராக்களின் அத்தனை வகைகளையும் அங்கே நீங்கள் கண்டு ரசிக்கலாம். பல நூறு கேமராக்கள் (1700) காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. புகைப்படம், ஒளிப்பதிவு, திரைத்துறை என ஆர்வமிருக்கும் அத்துனை பேரும் தவறாமல் சென்று வர வேண்டிய இடம் அது. 
 
 
தொடரும்...

Comments