புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 03) By Vijay Armstrong

Comments · 2658 Views

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 03) By Vijay Armstrong Cinematographer Tamil Film industry

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 03)

 
புகைப்படக்கலையின் வளர்ச்சி என்பதை, ஒருபுறம் அதன் தொழில்நுட்ப வளர்ச்சி மறுபுறம் அதன் பயன்பாடு மற்றும் கலைத்தன்மையின் வளர்ச்சி என்பதாகத்தான் புரிந்துக்கொள்ள வேண்டும்.  எந்தக் கலையாக இருப்பினும், அதன் பின்னே தொழில்நுட்பத்தின் பங்கும் இருக்கிறது.  அதேப்போல எந்தத் தொழில்நுட்பமாக இருந்தாலும், அது மனிதக்கூட்டத்தின் இருப்புக்கும், கலைக்கும், அரசியலுக்கும் பயன்பட்டால்தான்.. அது சாஸ்வதமாகும்.
 
வரலாற்றில் புகைப்படத்திற்கென்று ஒரு தனியிடம் உண்டு. புகைப்படமென்னும் இக்கலை, வரலாற்றின் எண்ணிலடங்கா தருணங்களில் பங்காற்றியிருக்கிறது. ஒரு புகைப்படம் உண்டாக்கின அதிர்வு, ஒரு புகைப்படம் ஏற்படுத்திய கவன ஈர்ப்பு, ஒரு புகைப்படம் நிகழ்த்திட்ட பெரும் மாற்றங்கள் என வரலாற்றில் பல சம்பவங்கள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
 
மனிதன் இடம் பெற்ற முதல் புகைப்படம்:
 
பாரிஸ் நகரின் தெருவொன்றில், காலணிகளுக்கு பாலிஸ் (shoe polish) போடும் அந்த நபருக்கும், அவருக்கு தன் ஷூவைக் காட்டிக் கொண்டிருந்தவருக்கும், அப்போது தெரிந்திருக்கவில்லை, தாங்கள் ஒரு வரலாற்று நிகழ்வில் இடம் பிடிக்கப்போகிறோமென்று. 
 
 
 
Boulevard du Temple
 
‘லூயிஸ் டாகெர்’ (Louis Daguerre) 1839 -இல் அவருடைய வீட்டு சன்னல் வழியே எடுத்த, இப்புகைப்படத்தில் இருப்பது அவர்கள்தான். அதுநாள் வரை, மனிதர்கள் ஓவியங்களின் மூலமாகத்தான் காட்சிப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள்.  புகைப்படமாக பதிவு செய்யப்பட்டது கிடையாது. இதுவே வரலாற்றில் முதல்முறை.
 
அப்புகைப்படத்திற்கு 'Boulevard du Temple’ என்று பெயர், இக்காட்சியை பதிவு செய்ய பல மணித்துளிகள் தேவைப்பட்டன. அக்கணத்தில் தெருவில் பலர் நடந்துக்கொண்டிருந்த போதும், புகைப்படத்தில் பதிவுவாகும் அளவிற்கு நேரமின்மையால் அவர்கள் பதிவாகவில்லை.  நிலையாக சில மணித்துளிகள் நின்றுக்கொண்டிருந்தவர் மட்டும் பதிவாகியிருக்கிறார்.  காரணம் அப்போதைய புகைப்படத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அப்படி. காட்சி ஒன்றைப் பிம்பமாக பதிவு செய்யும் வேதிப்பொருட்களின் (silver-plated sheet of copper) வேகம் குறைவாக இருந்தது.
 
‘லூயிஸ் டாகெர்’ அப்பிம்பத்தை, டெவலப் செய்து, நிரந்தமாக இருக்கும் படியும் செய்தார் (developed and fixed the image using chemicals). இதுவே உலகின் முதல் ‘first mirror-image photograph’ ஆகும். மேலும், இப்பிம்பத்தை, பிரதி எடுக்கவோ, மற்ற ஊடகத்தில் பிரிண்ட் செய்யவோ முடியாது. இது ஒரு உலோகத்தகட்டில் பதிந்திட்ட ஒரு பிரதிபலிப்புப் பிம்பம், அவ்வளவுதான்.
 
‘ஜோசப் நியெப்ஸ்’ கண்டுபிடித்திருந்த கேமரா (கடந்த மாத கட்டுரையைப் பார்க்கவும்) பரவலாக பயன்பாட்டிற்கு வரவில்லை. காரணம், ‘ஜோசப் நியெப்ஸ்’ தன்னுடைய தொழில் நுணுக்கத்தை வெளியிட மறுத்து விட்டார். மேலும், அவர் எடுத்த புகைப்படங்களில் தெளிவின்மையும், தரம் குறைந்தும் (the images lacked clarity and detail) காணப்பட்டதும் காரணம். அதன் பிறகு 1829-இல் ‘லூயிஸ்-ஜாக்-மன்டே டாகர்ரே’(Louis-Jacques-Mandé Daguerre), தன் ஓவியர் சகாவுடன் இணைந்து, தன் கண்டுபிடிப்பை மேலும் மேம்படுத்தினார். ஜோசப் நியெப்ஸின் கேமராவில் மேலும் சில மாற்றங்கள் செய்து, உலகின் முதல் வெற்றிகரமான கேமராவை உருவாக்கினார்கள். அக்கேமராவிற்கு ‘டாகர்ரே’ (Daguerre) என்று பெயர். அக்கேமரா தெளிவான பிம்பங்களை பதிவு செய்யும் தன்மை கொண்டிருந்தது. மேலும், அப்பிம்பத்தை, வேதி மாற்றத்திற்கு உட்படுத்தி நிரந்தரமாக நிலைத்திருக்கும் படி செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
 
 
 
Daguerre Camera
 
 
‘டாகர்ரே’ (Daguerre) கேமராக்கள் உடனடியாக பெரும் வணிக வெற்றியை அடைந்தன. அது பிம்பங்களை பதிவு செய்ய குறைந்த நேரத்தை எடுத்துக்கொண்டதும், பதிவு செய்த பிம்பங்கள் தெளிவானதாகவும் இருந்ததே காரணம். உலகம் முழுவதும் இத்தொழில்நுட்பம் பரவலாக பரவியது.
 
 
உலகின் முதல் காப்புரிமைப்பெற்ற (Patented) கேமரா:
1839-இல் ‘அலெக்சாண்டர் எஸ். வோல்காட்’ (Alexander S. Wolcott) என்னும் கண்டுபிடிப்பாளர், தன் சகா ‘ஜான் ஜான்சனோடு’( John Johnson) இணைந்து உலகின் முதல் ‘உருவப்படத்தை’ (Portrait) எடுத்தார். ‘டாகர்ரே’ வகை கேமராவை மேலும் சில மாற்றங்களுக்கு உட்படுத்தி புதிய வகை கேமராவை அவர் கண்டுபிடித்திருந்தார். அதனைப் பயன்படுத்தியே இப்படத்தை அவர் எடுத்தார்.  பிறகு மே 8, 1840 ஆம் ஆண்டு, ‘Wolcott's camera’ என்னும் தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு அமெரிக்காவில் காப்புரிமைப் பெற்றார். இதுவே உலகின் முதல் காப்புரிமைப்பெற்ற (Patented) கேமராவாகும். இக்கேமராவைப் பயன்படுத்தி, உலகின் முதல் வணிக புகைப்படக் காட்சிக்கூடம் மற்றும் ஸ்டுடியோவை நிறுவினார் (world's first commercial daguerreotype gallery, a portrait photography studio) . 
 
 
 
Wolcott reflector mirror camera diagram of patent No. 1,562 
 
 
 
Wolcott's box camera invention patented May 8, 1840
 
 
 
 
 
உலகின் முதல் ‘Selfie’ எதுவென்று தெரியுமா? அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்..
 
 
 
(தொடரும்)
Comments